கண்டியில் அதிர்ச்சி: தாய், தந்தை தகராறில் 9 வயதுப் பிள்ளைக்குத் தீக்காயம்!
கண்டி – கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹ பகுதியில் உள்ள வீடொன்றில் தாய் மற்றும் தந்தைக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 9 வயதுடைய பெண் பிள்ளை ஒன்று தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 17, 2025) இடம்பெற்றுள்ளதாகக் கலஹ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று வீட்டினுள் தாய் மற்றும் தந்தைக்கு இடையில் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது வீட்டினுள் தீ பரவியதில், பிள்ளை தீக்காயங்களுக்குள்ளாகி பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையின் தந்தைதான் வீட்டிற்குள் தீ வைக்க முயன்றதாகப் பிள்ளையின் தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
எனினும், அயல் வீட்டார்கள், தீ விபத்து ஏற்பட்டபோது, “ஏன் அம்மா எனக்கு இப்படி செய்தீர்கள்” எனப் பிள்ளை அலறும் சத்தம் கேட்டதாகப் பொலிஸாரிடம் அதிர்ச்சித் தகவலை வழங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பிள்ளையின் தந்தை பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கலஹ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





