இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தல்: படகுடன் மூவர் கைது!
இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த படகு ஒன்றுடன் மூவர் இன்று அதிகாலை யாழ். கடற்கரையில் வைத்து யாழ். மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து குறித்த படகு 350 கிலோகிராம் கஞ்சாவுடன் வருவதாகக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்துக் கரையில் வைத்து கஞ்சாவைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், கரைக்கு வந்த படகை முதலில் கைப்பற்றி, அதில் பயணித்த இருவரைக் கைது செய்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில், கொண்டுவரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இடைநடுவில் கைமாற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த படகு இந்தியக் கடலில் பயணித்தமை ஜி.பி.எஸ் (GPS) மூலம் அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
படகில் வந்த இருவரையும் அழைத்துச் செல்லக் காத்திருந்த மற்றொரு நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 130 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து யாழ். காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





