இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் பல தனியார் பேருந்துகள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராகவே இவ்வாறு தமது சேவைகளை இடை நிறுத்தியுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது சேவைகளில் இருந்து விலகியுள்ளதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தத்துடன் குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை இன்று காலை முதல் நாட்டின் பல பிரதேசங்களில் எரிபொருள் விலையேற்றம், மற்றும் எரிபொருளை சீராக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்புக்கனையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக,அங்கு கண்டிக்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் திகன பிரதேசத்தில் எரிபொருளை வழங்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இன்று காலை பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து எரிபொருளைக் வழங்கக் கோரி குறித்த போராட்டத்தை முன்னடுத்திருந்தனர்.
கொழும்பு சிலாபம் வீதியில் உள்ள காகபல்லி பிரதேசத்திலும்,எரிபொருளை வழங்கக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள சில பிரதான வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.