நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ள நிலையில், இந்தியாவிடம் இருந்து 1 பில்லியன் டொலர் கடன் உதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடுவதே அவரது பயணத்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிதியமைச்சராகப் பதவியேற்ற பின்னர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்குச் சென்று பேச்சுக்களை நடத்தியிருந்த போதும், பிரதமர் நரேந்திர மோடியை அவரால் சந்திக்க முடியவில்லை.
அதற்குப் பின்னர், இரண்டு முறை பசில் ராஜபக்ச இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்ட போதும், கோவிட் மற்றும் உக்ரைன் நெருக்கடிகளால் அந்தப் பயணங்கள் தடைப்பட்டன.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் மோசமடைந்து வரும் நிலையில், 1 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களை இறுதி செய்வதற்காக பசில் ராஜபக்ச இன்று புதுடெல்லிக்குப் பயணமாகிறார்.
அவர், இந்தப் பயணத்தின் போது, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னமும் வெளியாகவில்லை.