மட்டக்களப்பு தொடர் கொலைச் சம்பவம்: மயக்க மருந்து விநியோகித்த நபர் சிக்கினார்!
மட்டக்களப்பில் பெண்களை மயக்கி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவத்துடன் தொடர்புடைய 37 வயதுடைய முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவர் நேற்று (26.03.2026) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான குழுவினர் நடத்திய இந்தச் சுற்றிவளைப்பில், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சத்திரசிகிச்சைக்கான மயக்க மருந்துகள், ஸ்பிரேக்கள் மற்றும் மாத்திரைகள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், காஞ்சிரம்குடா பகுதியில் உள்ள அவர்களது வீட்டு வளவில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மயக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து இந்த மருந்துகளை வாங்கியுள்ளதாகவும், அவற்றை விநியோகிப்பதில் இந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர் முக்கிய பங்கு வகித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை கிணற்றிலிருந்து இளம் தாய் ஒருவர் உயிருடனும், மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வலையமைப்பு அம்பலமானது.
ஏற்கனவே 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (27.03.2026) மீண்டும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.





