இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழகத்தில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்க மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது.
முதல்கட்டமாக தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் தொன் அரிசி, 500 தொன் பால் மா மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது.
மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர், வருமான வரி விலக்கு பெறலாம். ” என்றும் தெரிவித்துள்ளார்.