உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (ஏப்ரல் 21) ஏழு ஆண்டுகள்
கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதனை முன்னிட்டு இன்று காலை 8:45 மணிக்கு, குண்டு வெடித்த அதே நேரத்தில் அனைத்துத் தேவாலயங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், வெளிநாட்டுத் தூதுவர்கள் பங்கேற்ற விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறியக் கோரி, இன்று மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா கல்லூரி மைதானத்திலிருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை மாபெரும் பிரார்த்தனைப் பேரணி நடைபெறவுள்ளது.
இது குறித்துக் கருத்து வெளியிட்ட அருட்தந்தை ஜூட் கிருஷாந்த, இந்தத் தாக்குதல் விசாரணை திசைதிருப்பப்படுவதாகவும், சீரழிந்த அரசியல் கலாசாரத்தை மாற்ற இந்தப் படுகொலைகளுக்கு நீதி கிடைப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது.




