பெண்களுக்கு மரண தண்டனை என்ற தகவலை மறுத்தது ஈரான்
ஈரானில் எட்டு பெண்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகக் கூறி, மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது ஈரானுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குச் சாதகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இதனை முற்றாக மறுத்துள்ள ஈரானின் அதிகாரப்பூர்வ ‘மிசான் ஆன்லைன்’ இணையத்தளம், ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை போலிச் செய்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மரண தண்டனையின் விளிம்பில் இருப்பதாகக் கூறப்படும் அந்தப் பெண்களில் சிலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், ஏனையோர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டாலும் அவர்களுக்குச் சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஈரான் நீதித்துறை விளக்கமளித்துள்ளது.
சமூக ஆர்வலர்களின் பதிவை அடிப்படையாகக் கொண்டு ட்ரம்ப் வெளியிட்ட புகைப்படங்கள் உண்மைக்குப் புறம்பானவை எனச் சுட்டிக்காட்டியுள்ள ஈரான், இத்தகைய வதந்திகள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.




