கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய போர்க்கப்பல்!
இந்திய கடற்படையின் அதிநவீன வசதிகளைக் கொண்ட ‘ஐ.என்.எஸ் நிரிஷெக்’ (INS Nireekshak) போர்க்கப்பல் நேற்று (21) காலை கொழும்பு துறைமுகத்தைச் சென்றடைந்தது.
கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் இந்தக் கப்பலை உற்சாகமாக வரவேற்றனர். கமாண்டர் சைலேஷ் குமார் தியாகி தலைமையில் வந்துள்ள இக்கப்பல், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லெண்ணம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளது.
இந்தக் கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இந்திய மற்றும் இலங்கை கடற்படை வீரர்கள் இணைந்து பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
குறிப்பாக, சுழியோடி துறையில் அனுபவப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், கப்பலின் குழுவினர் இலங்கையின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பயணம் செய்யவுள்ளதுடன், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தும் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளனர்.





