இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் அகதிகள் போல தமிழ்நாட்டுக்கு சென்றமை தெரியவந்துள்ளது.
நேற்றுக் காலை தமிழகத்தின் தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதியைச் சென்றடைந்த இருவரிடம், மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தினர்.
இதன்போது, இலங்கையில் போதைப்பொருள் வழக்கு நிலுவையில் உள்ளதால், யாழ்ப்பாணத்தில் இருந்து படகை திருடிக் கொண்டு தமிழ்நாட்டுக்கு தப்பி வந்தது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் பகுதியை சேர்ந்த சீலன் மற்றும், அருள்ராஜ் என்பது தெரியவந்துள்ளது.
முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததால் சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தகவல் சேகரித்தனர்.
அப்போது, இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதும், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இருவர் மீதும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள், கடவுச்சீட்டு இன்றி ஊடுருவியதாக தேவிபட்டினம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.