ஹட்டன் வனப்பகுதியில் சிக்கிய நெதர்லாந்து மாணவி : உயிருக்குப் போராடிய நிலையில் மீட்ட ஹட்டன் பொலிஸார்
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவியான லூனா துகாட், ருஹுனு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் திட்டத்திற்காக இலங்கை வந்துள்ளார்.
நேற்று (06.04.2026) காலை ஹட்டன் சிங்கமலை சிகரத்தைப் பார்வையிடச் சென்ற அவர், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் வழிதவறி மலை உச்சியில் சிக்கிக்கொண்டார். கீழே இறங்குவதற்கான வழியைக் கண்டறிய முடியாமல், செங்குத்தான பாறை ஒன்றின் மேல் அமர்ந்து உயிருக்குப் போராடிய நிலையில் அவர் தவித்துள்ளார்.
மாணவியிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து, ஹட்டன் பொலிஸ் சிரேஷ்ட கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின் பேரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.
அடர்ந்த காடு மற்றும் மலைப்பாதைகள் வழியாகச் சென்ற பொலிஸ் குழுவினர், ஜி.பி.எஸ் (GPS) தொழில்நுட்பம் மற்றும் தேடுதல் வேட்டை மூலம் மாணவி இருந்த இடத்தை அடையாளம் கண்டனர். பாறை உச்சியில் தவித்த அவருக்கு உணவு மற்றும் நீர் வழங்கி, மிகவும் பாதுகாப்பாகப் பொலிஸார் கீழே அழைத்து வந்தனர்.
பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்ட லூனா துகாட், தன்னை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்த ஹட்டன் பொலிஸாருக்குக் கண்ணீர் மல்கத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறான அடர்ந்த வனப்பகுதிகளுக்குச் செல்லும் போது உள்ளூர் வழிகாட்டிகளின் உதவியைப் பெறுவது அவசியம் எனப் பொலிஸார் இதன்போது அறிவுறுத்தியுள்ளனர்.





