இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் மீனவர்கள் பாரிய போராட்டம்!
எல்லை தாண்டி வந்து சட்டவிரோத இழுவைப் படகு மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி, யாழ் மாவட்டக் கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் முன்பாகப் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தின் காரணமாக, பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட காலமாக வடக்குக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தக் காத்திரமான நடவடிக்கை எதையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனக் மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனால் தமது கடல் வளங்கள் சூறையாடப்படுவதாகவும், தமது வாழ்வாதாரம் முடக்கப்படுவதாகவும் தெரிவிக்கும் நூற்றுக்கணக்கான மீனவர்கள், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் எனக் கோரியே ஒன்றிணைந்து இப்போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டத்தை அடுத்து மீனவப் பிரதிநிதிகளை அதிகாரிகள் சந்தித்துப் பேசுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





