அராலி வீதியில் உள்ள மதகில் பெரும் குழி – மக்கள் அதிர்ச்சி!
அராலி பாலம் மற்றும் அராலி துறை இடையே உள்ள முக்கிய வீதியில் உள்ள மதகில் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானது மற்றும் 789 வழித்தட பேருந்துகள் பயணிக்கும் முக்கிய பாதையாகும்.
இந்த மதகில் சுமார் இரண்டு அடி நீளமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட குழி தோன்றியுள்ளது. கொங்கிரீட்டில் செய்யப்பட்ட தகடு உடைந்து இந்த குழி உருவாகியுள்ளது. அதுவும், இந்த கொங்கிரீட் தட்டில் கம்பிகள் இல்லாததால், முன்னர் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளின் தரம் குறைவாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் மற்றும் கவலை ஏற்பட்டுள்ளது.
இவ் வீதியினூடாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் 789 வழித்தட ஒரு பேருந்து சேவை. வயோதிபர்கள், மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் மக்கள் பயணிக்கின்றனர். மேலும், இந்த வீதியின் அகலம் குறைவாக இருப்பதால், எதிர் வாகனங்களுக்கு இடம் கொடுக்க கடினமாகிறது. இதனால், பயணிகள் உயிர் ஆபத்தினை எதிர்கொள்கின்றனர்.
பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் புளியம்பொக்கணைக்கு அருகிலுள்ள பாலம் புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டதால், அந்த பாலத்தில் விழுந்து இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். இதற்கு மத்தியில், இந்த மதகின் சேதம் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருப்பது மேலும் ஆபத்துக்கு வழிவகுக்கின்றது.
இந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளனர்.