இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும் இணைந்து அஞ்சலித்துள்ளார்.
இன்று மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. 13 ஆம் ஆண்டு இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை அனுஷ்டிப்பதற்காக வடக்கில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் இடத்தில் சங்கமித்தது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்க சங்கத்தின் தலைவர் வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், மதத்தலைவர்கள் இளைஞர்கள் என பலரும் இணைந்து இந்த பேரணியினை வழிநடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இலங்கை வரலாற்றிலே முதல் தடவையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சிங்கள மக்களும் இணைந்து நினைவு கூர்ந்த சம்பவம் ஆச்சர்யத்தையும், நெகிழிச்சியையும் உணடாக்கியுள்ளது. கொழும்பு – காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ காமவில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் மக்கள் , சிங்கள மக்கள் , சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் இடம்பெற்றுள்ளமை இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின் துளிரை துளிர்க்கச் செய்வதாக அமைந்துள்ளது
அதேபோல நாட்டின் பல இடங்களில் நினைவாஞ்சலிகள் செலுத்தப்பட்டன.வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது. இதன் போது, நாட்டில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு நிபந்தனைகளுள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கான பொருப்புக்கூறல் முக்கியத்துவமுடையதாக அமையவேண்டும் என பாதிக்கப்பட்ட இனத்தில் இருந்து தாம் கோரிக்கை விடுப்பதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் தெரிவித்திருந்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மன்னாரில் இடம் பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி,மலர் தூவி ஆஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்கால் நினைவிடத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் இனபேதமதமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் தமது அஞ்சலியினை செலுத்திவருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் .குவிக்கப்பட்டு வீதித்தடை மற்றும் புலனாய்வு நடவடிக்கையிலும் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது நிறுவன செய்தி சேகரிப்பாளர் தெரிவித்துள்ளார்.