புகையிரதங்கள், அரசாங்கத்திற்கு சொந்தமான கொள்கலன் ஊர்திகள் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் விநியோக நடவடிக்கைகளுக்கு தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகள் இடையூரு ஏற்படுத்துவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்படுவதாக எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போது கிராமப்புறங்களுக்கு புகையிரதங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்கவும், டிப்போக்களுக்கு தேவையான எரிபொருளை மாட்டும் புகையிரதங்களில் கொண்டு செல்லவும் அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார்.இந்த செயற்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி முன்னெடுப்பதற்கான புதிய அறிவுறுத்தல்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று வெளியிட்டார்.
இதேவேளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி சாரதிகள் சங்கத்தினருக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.வலுசக்தி அமைச்சில் இன்று முற்பகல் 11.30 அளவில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் இன்னமும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.