அணுமின் நிலையத்தில் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் : ஈரான் எச்சரிக்கை
ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமான புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களால், அங்கு பாரிய கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி, ஐ.நா பொதுச்செயலாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில், இந்தத் தாக்குதல்கள் ஈரானை மட்டும் பாதிக்காது, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கே சுற்றுச்சூழல் ரீதியாகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானின் அணுசக்தித் தளங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 1 அன்று நடன்ஸ் (Natanz) அணுசக்தி நிலையமும், மார்ச் 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் புஷெர் அணுமின் நிலையத்தின் மிக அருகாமையிலும் குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டுள்ளன.
மார்ச் 27 அன்று மூன்றாவது முறையாகப் புஷெர் ஆலை தாக்கப்பட்ட நிலையில், கோண்டாப் கனநீர் உற்பத்தி நிலையம் மற்றும் யுரேனியம் பதப்படுத்தும் தளங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
செயல்பாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் மீது இவ்வாறான தாக்குதல்களை நடத்துவது சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு முற்றிலும் முரணானது எனத் தெரிவித்துள்ள ஈரான், இது மனித குலத்திற்கு எதிரான குற்றம் எனச் சாடியுள்ளது.
கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டால் அதன் தாக்கம் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்பதால், சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு இத்தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அப்பாஸ் அராக்ஷி வலியுறுத்தியுள்ளார்.





