நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களுடனான சந்தித்த போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் மதம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அந்தந்த மாகாணங்களின் மதத் தலைவர்கள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.
அத்துடன், தொல்பொருட்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, குருந்தி விகாரையின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிப்பிரதேசங்களிலிருந்து எவரையும் அழைத்துவர வேண்டாம் என, அந்த பகுதியிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அப்பகுதி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ள நிலையில் வெளியிலிருந்து வந்த குழுவினரே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதனால் வெளியிலிருந்து அந்த பிரதேசத்திற்கு செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.