முல்லைத்தீவு சிறுமி மரணம்: மருத்துவர் மற்றும் தாதியர் மீது அதிரடி நடவடிக்கை
முல்லைத்தீவு, சிலாவத்தைப் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், நிபுணர் குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.
மருத்துவமனை அறிக்கைகளில் குளறுபடிகள் இருப்பதாகக் கருதப்படுவதால், இது குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையில் இருந்த தாதியரை உடனடியாகச் சாதாரண வார்டுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவரைத் தனித்துச் செயற்பட விடாமல், மற்றொரு மூத்த மருத்துவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் பணியமர்த்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு, மாகாணப் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 21-ம் திகதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்குச் சரியான முறையில் மருத்துவம் வழங்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இது தொடர்பான முழுமையான அறிக்கை இன்னும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





