நாசாவின் ஆர்டெமிஸ்-2 மிஷன் பிரம்மாண்ட வெற்றி – பசுபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்கிய விண்கலம்
நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ திட்டம் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் 10 நாள் பயணமாக நான்கு விண்வெளி வீரர்கள், மனிதர்கள் இதுவரை சென்றிராத 4,06,771 கிலோமீற்றர் தொலைவை எட்டி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு பெண் விண்வெளி வீரர் உட்பட அனைவரும் நிலவின் மறுபக்கத்தை நேரில் கண்டு ஆய்வு செய்த முதல் மனிதர்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்.
நிலவைச் சுற்றியுள்ள ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்குத் திரும்பிய விண்கலம், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5.37 மணியளவில் அமெரிக்காவின் சான் டியாகோ அருகே பசுபிக் பெருங்கடலில் திட்டமிட்டபடி இறங்கியது.
மூன்று பாராசூட்டுகளின் உதவியுடன் விண்கலம் கடலில் மெதுவாக இறங்கிய நிலையில், அதிலிருந்த நான்கு விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நிலவின் தென் துருவத்தில் மனிதர்களைத் தரையிறக்கும் அடுத்தகட்ட ஆர்டெமிஸ் திட்டங்களுக்கு இந்த வெற்றி ஒரு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
விண்வெளி ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ள இந்த நான்கு வீரர்களுக்கும் உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மனிதர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை இந்த மிஷன் உறுதி செய்துள்ளது.




