உக்ரைன் – இத்தாலி இடையே புதிய ட்ரோன் ஒப்பந்தம்! மெலோனியைச் சந்தித்துப் பேசிய ஜெலென்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி வலோடிமிர் ஜெலென்ஸ்கி, இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது உக்ரைன் வான்பரப்பைப் பாதுகாப்பதற்கான தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய ‘ட்ரோன்’ (Drone Deal) ஒப்பந்தத்தைச் செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதற்கான தொழில்நுட்ப விபரங்களை இரு நாட்டு நிபுணர் குழுக்களும் விரைவில் இறுதி செய்யும் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பின் ஆரம்பம் முதல் உக்ரைனுக்கு இத்தாலி வழங்கி வரும் உறுதியான ஆதரவிற்கு அவர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆராய்ந்தனர்.
மத்திய கிழக்குத் தலைவர்களுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை ஜெலென்ஸ்கி இத்தாலியுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்தப் போர் முடிவுக்கு வந்த பின்னர், உலகம் முன்பை விட அதிக பாதுகாப்பான இடமாக மாற வேண்டும் என்பதில் இருவரும் உடன்பட்டனர்.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தங்களது நலன்களையும் வாழ்க்கை முறையையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என ஜெலென்ஸ்கி இதன்போது வலியுறுத்தினார்.





