குவைத்தில் பற்றியெரியும் எண்ணெய் ஆலைகள்! ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் 35-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானியப் படைகள் இன்று (03.04.2026) குவைத்தின் முக்கிய எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளன.
இன்று அதிகாலையில் மத்திய கிழக்கின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான ‘மினா அல்-அஹ்மதி’ ஆலை மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நண்பகலில் ஈரானிய ஏவுகணைகள் குவைத்தின் மின் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் தாக்கி அழித்துள்ளன.
குவைத்திற்கும் ஈரானின் கடற்கரைக்கும் இடையே வெறும் 80 கிலோமீட்டர் தூரமே உள்ளதால், ஈரானின் தாக்குதல்களுக்கு மிக எளிதான இலக்காகக் குவைத் மாறியுள்ளது.
இந்தத் தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தின் பல பிரிவுகளில் பாரிய தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகக் குவைத் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், நாட்டின் எரிசக்தி மற்றும் குடிநீர் விநியோகக் கட்டமைப்பிற்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது.
குவைத்தின் முக்கிய சுத்திகரிப்பு ஆலை இலக்கு வைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கும் வளைகுடா நாடுகளுக்குப் பாடம் புகட்டவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நாடு முழுவதும் மக்கள் அதியுச்ச எச்சரிக்கை நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உள்நாட்டு நுகர்வுக்கு இன்றியமையாத இந்த ஆலைகள் சேதமடைந்துள்ளமை குவைத்தின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.





