ஈரானில் சிதறிய அமெரிக்க போர் விமானம்! விமானியைத் தேடி இராணுவங்கள் தீவிரம்
ஈரானின் வான்பரப்பில் அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதை அமெரிக்க அதிகாரி ஒருவர் தற்போது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானியப் புரட்சிகரக் காவற்படையின் (IRGC) ஏவுகணைத் தாக்குதலில் விமானம் சிதறி வீழ்ந்ததைத் தொடர்ந்து, அதிலிருந்த விமானி மற்றும் குழுவினரைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாயமான விமானியைத் தேடி அமெரிக்காவின் மீட்புப் படைகள் களமிறங்கியுள்ளன.
அதேவேளை, ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானியப் படைகளும் விமானியைக் கண்டுபிடித்துத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தீவிரமாக முயன்று வருகின்றன. விமானி ஈரானியப் படைகளிடம் சிக்கினால், அது போரின் போக்கை மேலும் சிக்கலாக்கும் என அஞ்சப்படுகிறது.
ஈரானுடனான நேரடி மோதலில் அமெரிக்கப் போர் விமானம் வீழ்த்தப்பட்டு, விமானி மாயமாகியுள்ளமை ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
“எமது வீரர்களை மீட்பதே தற்போதைய முதன்மை இலக்கு” எனப் பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வான்பரப்பில் ஈரானின் பிடி இறுகி வருவதை இந்தச் சம்பவம் காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.





