ஜனாதிபதி அநுரவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
அனைவரினதும் வாழும் உரிமையையும், அதைச் சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதையும் தமது அரசாங்கம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு அவர் இன்று (ஒக்டோபர் 20) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூரும் தீபாவளிப் பண்டிகை, அதர்மத்தை தோற்கடித்து அநீதியை வென்றது போன்றே, அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையுடன் கொண்டாடப்படுகிறது.
தற்போது நம்முன்பாக உள்ள பாரிய சவாலைப் போன்றே, நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் போதைப்பொருள் மற்றும் மறைந்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நமது பிரஜைகள் மட்டுமன்றி, இந்த நாட்டில் வசிக்கும் மற்றும் வருகை தரும் அனைத்து மக்களின் உடல், மன, பௌதீக மற்றும் உணர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
அனைத்து மதவாத மற்றும் இனவாத சக்திகளையும் தோற்கடித்து சமூக நீதியை நிலைநாட்டவும், அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் உறுதிபூண்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டையும் ஒளிரச் செய்யும் விளக்குகளுடன், ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ தொடர்பான மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நமது ஒன்றிணைந்து செல்லும் பாதை இன்னும் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்துப் பக்தர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது மகிழ்ச்சிகரமான தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.





