பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதிய பிரதமரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
அரசாங்க மற்றும் எதிர்த்தரப்பு என இரண்டு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரை புதிய பிரதமராகப் பெயரிடுமாறு, ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் நேற்று மாலை கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை அமைச்சர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடத்திய சந்திப்பின் போது, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதும் அதனிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்று பிரதமர் செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
எனினும், தற்போது, பிரதமர் பதவிக்கு ஒருவரை பெயரிடுமாறு பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டிருப்பது அவரது நிலைப்பாடு குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதனிடையே பதில் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதும் ரணில் விக்ரமசிங்க, நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டிருந்தார்.
அத்துடன், நாட்டின் அமைதியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் முப்படைகள் மற்றும் பொலிசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுகளை கடைப்பிடிக்க வேண்டாம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்கள் முப்படைகள் மற்றும் பொலிசாரிடம் கோரியுள்ளனர்.