எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்கத் தயார்!” – நுகேகொடை மேடையில் நாமல் ராஜபக்ச சூளுரை!
“பொய் கூறுவதை நிறுத்திவிட்டு, முறையாக மக்களுக்குச் சேவை செய்ய ஆரம்பிக்காவிடின் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தைக் கவிழ்க்கத் தாயாராக உள்ளோம்” என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இணைந்து ‘மாபெரும் மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 21, 2025) நுகேகொடையில் நடத்திய மாபெரும் பொதுப் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்சவின் முக்கிய குற்றச்சாட்டுகள்:
இறக்குமதிக் கொள்கை: “வரலாற்றில் முதல் தடவையாக உள்ளூர் உற்பத்திகளை விடவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது சிறந்தது எனக் கூறும் ஒரு அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது.”
IMF விவகாரம்: “ஐ.எம்.எப் (IMF) வீட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், வந்தவுடன் அதனை அரவணைத்துக் கொண்டார்கள்.”
அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை: நீதித்துறைக்கும், பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் அரசாங்கம் அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. எனவே, அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்காமல் மக்களுக்காகச் சேவை செய்யுமாறு அரசாங்கப் பணியாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
விவசாயிகள் மற்றும் அரிசி மாஃபியா: அன்று விவசாயிகளுடன் வயலுக்கு இறங்கியவர்கள் இன்று விவசாயிகளைக் கண்டுகொள்வதே இல்லை என்றும், அரிசி மாஃபியாவை நிறுத்துவதாகக் கூறிய அரசாங்கம் அதற்குத் தீர்வு வழங்கவில்லை என்றும் நாமல் குற்றம் சாட்டினார்.
போதைப்பொருள் ஒழிப்பு: “போதைப்பொருள் ஒழிப்பிற்கு நாங்கள் விரோதமானவர்கள் அல்ல. எனினும், சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலகன் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பியுங்கள் என நினைவுகூர விரும்புகின்றோம்.”
தேர்தல் நோக்கங்களுக்காக அல்லாமல், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தாங்கள் தயார் என்ற செய்தியை வழங்கவே இந்த அவசர ஒன்றுகூடல் என்றும் நாமல் ராஜபக்ச தனது உரையில் குறிப்பிட்டார்.





