வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்
விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் வகையில், தற்போதுள்ள 6 முக்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், மேலும் சில பயிர்களுக்கு ஓரளவு நஷ்டஈடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
“வெங்காயம், நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய 6 பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். இதன் படி, அரசு திறைசேரியில் உள்ள பணத்தை பயன்படுத்தி இழப்பீடு வழங்கவும், நிலைமையை கருத்தில் கொண்டு, அமைச்சரவையிடம் கோரிக்கை வைக்கத் தயாராக உள்ளோம்.”
மோசமான வானிலை விவசாயத்திற்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய பருவத்திற்கான நெற்பயிர்கள் உட்பட பல பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள் இன்னும் நீரில் மூழ்கி உள்ளன.
அதே நேரத்தில், கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் வடக்கு, வடமத்திய, கிழக்கு பகுதிகளில் பெருமளவான விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. இவ்வாறான சூழலில், விவசாய அமைப்புகள் அரசு உடனடியாக இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.