இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய எரிசக்தி துணை அமைச்சர்
இலங்கை அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில், ரஷ்யப் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று காலை 10:52 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்தது.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் ஏனைய எரிசக்தி வளங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்வது குறித்து இக்குழுவினர் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் இன்று பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து உரையாடவுள்ளார்.
மேலும், நிதி அமைச்சின் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடனும் அவர் முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளார். அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி ஒப்பந்தம் (G2G) மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதே இந்தச் சந்திப்புகளின் பிரதான நோக்கமாகும்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மட்டுமல்லாது, ஏனைய எரிசக்தி வளங்களை இறக்குமதி செய்வதிலும் இலங்கை ஆர்வம் காட்டி வருவதாக ரஷ்யாவின் ‘டாஸ்’ (Tass) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யக் குழுவினர், அடுத்த வாரத்திற்குள் எரிபொருள் விநியோகம் தொடர்பான இறுதி முடிவை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளைச் சற்றுத் தளர்த்தியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இலங்கைக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும் எனக் கருதப்படுகிறது.





