வட கொரியா செவ்வாய்க்கிழமை காலை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி பரிசோதித்தாக ஜப்பானும், தென்கொரியாவும் கூறியுள்ளது.
“செவ்வாய்க்கிழமை காலை 7.27 மணியளவில் கிழக்குக் கடலை நோக்கி வட கொரியாவால் ஏவப்பட்ட சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை எங்கள் இராணுவம் கண்டறிந்தது,” என்று சியோலின் கூட்டுப் படைத் தலைவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
அதேநேரம் இந்த ஏவுதல் ஜப்பானின் கடலோர காவல்படையினராலும் அறிவிக்கப்பட்டதுடன், ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) வெளியே ஏவுகணை தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
இதனிடையே வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை ஏவுவது மிகவும் வருந்தத்தக்கது என்று ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா செய்தியாளர்களிடம் கூறினார்.
தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், அவசரக் கூட்டத்தை நடத்தியது, சோதனைக்கு “கடுமையான வருத்தம்” தெரிவித்ததாக ஜனாதிபதி புளூ ஹவுஸ் தெரிவித்துள்ளது.
வடகொரியா கடந்த வாரம் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவி பரிசோதித்தமையும் குறிப்பிடத்தக்கது.