தென்னிலங்கையில் பரபரப்பு: துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு!
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (ஒக்டோபர் 22) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த விதம்:
லசந்த விக்ரமசேகர, பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் அவரை நோக்கிச் சுட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பிரதேச சபை வளாகத்திற்குள் வந்துள்ளனர்.
அவர்கள், “கடிதத்தில் கையெழுத்திட வந்ததாக” கூறி தலைவரை அணுகி, துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த லசந்த விக்ரமசேகர, உடனடியாக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





