ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரை வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் ஆரம்பம்!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான சி.வேந்தன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரை நடவடிக்கைகளின் ஆரம்பமாக மணற்காட்டில் முன்னாள் போராளிகள் மற்றும் இளைஞர்களால் நேற்று (27.10.2024) காலை 07.00 மணியளவில் பரப்புரை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன.
சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேந்தன் அவர்கள் அதிகளவான மக்களை சந்தித்து அவர்களது தேவைப்பாடுகளை கேட்டறிந்ததோடு தேர்தல் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து பாராளுமன்றத்திற்கு புதிய முகங்களின் தேவைப்பாட்டை வலியுறுத்தி ஆதரவு கோரினார்.
பரப்புரையின் பின் ஊடகங்களுக்கு சி.வேந்தன் கருத்து தெரிவிக்கையில்,
பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் மணற்காட்டில் எமது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளோம். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் 18 கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கி இந்த பரப்புரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எமது தேர்தல் பரப்புரைக்கு தமிழ் மக்கள் பூரண ஆதரவு தருகின்றார்கள். போராளிகளை மக்கள் இன்முகத்துடன் வரவேற்று எமக்கான ஆதரவை தருகின்றார்கள். இந்த வடமராட்சி கிழக்கு மக்கள் தொடர்ந்தும் எமக்கான ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கின்றோம்.
பழையவர்களை தொடர்ந்து பாராளுமன்றம் அனுப்பி நாம் ஏமார்ந்த காலம் வரும் தேர்தலுடன் முடிவு பெறட்டும். எமது தமிழ் மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் எமது குரலும் ஓங்க முன்னாள் போராளிகளுடன் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து எமது கரத்தை பலப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இந்த பரப்புரையின் ஆரம்ப நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சியின் நாகர்கோவில் வட்டார உறுப்பினர் ஆனந்தராசா சுரேஷ்குமார், மணற்காடு கிராம அபிவிருத்திசங்க தலைவர் கமலன்,தாளையடி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் சுதா, ஜனநாயக போராளிகள் கட்சியின் வட்டார கிளை உறுப்பினர்கள், இளைஞர் அணி கிளை தலைவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.