இலங்கை மக்களுக்கு இந்த புத்தாண்டு சந்தோஷமாக அமையாது : எதிர்க்கட்சி தெரிவிப்பு
இலங்கையில் தற்போதைய மின்சாரக் கட்டண உயர்வுக்கு அரசாங்கத்தின் நிலக்கரி ஊழலே முக்கிய காரணம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், வரவிருக்கும் சித்திரைப் புத்தாண்டு காலம் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமையாது எனத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆரம்பத்தில் 13.5 சதவீத மின்சாரக் கட்டண உயர்வை நாடிய போதிலும், தற்போது வீட்டு உபயோக நுகர்வோருக்கான கட்டணம் 13.5 சதவீதமாகவும், ஏனைய பிரிவினருக்குச் சராசரியாக 10.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தொழிற்துறைகளுக்கான கட்டணம் 8.7 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் கைத்தொழில் துறை பாரிய நெருக்கடியைச் சந்திக்கும் எனச் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் வஜிர அபேவர்தன உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.



