இழப்பீடு கிடைக்கும் வரை போர் ஓயாது! – போர் நிறுத்த செய்திகளை மறுத்தது ஈரான்
ஈரான் ஐந்து அம்ச போர் நிறுத்தத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகள் வெறும் ஊடக யூகங்களே தவிர, அதில் உண்மையில்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரானின் ‘IRIB’ செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில், ஈரான் தரப்பில் இதுவரை எந்தவொரு போர் நிறுத்த முன்மொழிவும் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிபந்தனைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “ஆக்கிரமிப்பாளர் உரிய முறையில் தண்டிக்கப்படும் வரையிலும், ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்கப்படும் வரையிலும்” இந்தப் போர் தொடரும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஈரானின் இறையாண்மையை மீறிய நாடுகளுக்குப் பாடம் புகட்டப்படும் வரை பின்வாங்கப் போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் பொருளாதார மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்புகளுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப் போர் நீடிக்கிறது என தெரிவித்துள்ளார்.



