சுகாதாரச் சீர்கேடு காரணமாகத் திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் மூடப்பட்டது! யாழில் அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம், நுகர்வோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வருவதாகத் திருநெல்வேலி பகுதிப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) பா. சஞ்சீவனுக்குப் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நேற்று (20.05.2026) பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான விசேட சுகாதாரக் குழுவினர் அந்த உணவகத்திற்கு நேரில் சென்று அதிரடிப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த அதிரடிச் சோதனையின் போது, அதிகாரிகளால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை முற்றிலும் மீறி, அசுத்தமான சூழலில் உணவகம் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, நுகர்வோரின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, உணவகத்தில் உள்ள அனைத்துக் குறைபாடுகளும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் வரை, இன்று (21.05.2026) முதல் உணவகத்தைத் தற்காலிகமாக மூடுவதற்குப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா. சஞ்சீவன் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அம்மாச்சி உணவகத்தில் பணிபுரியும் உணவு கையாள்வோருக்கான அவசரச் சுகாதார விழிப்புணர்வுச் செயற்பாடும் இன்றைய தினம் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.





