ஈரானின் நடான்ஸ் அணு நிலையத்தை மீண்டும் தாக்கிய அமெரிக்காவின் Bunker buster
ஈரானின் மிக முக்கிய அணு செறிவாக்கு நிலையமான நடான்ஸ் (Natanz) மீது இன்று காலை அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
நிலத்தடித் தளங்களைத் தகர்க்கக்கூடிய ‘Bunker Buster’ ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் அணு ஆற்றல் அமைப்பு (AEOI) இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது ஒரு ஆக்கிரமிப்புக் குற்றச்செயல் எனச் சாடியுள்ளது.
இந்தத் தாக்குதலில் நிலையத்தின் நுழைவாயில்கள் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகச் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், அணு உலைத் தளத்தின் வெளிப்புறத்தில் கதிரியக்க அளவில் எந்த உயர்வும் இல்லை எனவும், கதிரியக்கப் பொருட்கள் கசியவில்லை எனவும் IAEA தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தற்போது எந்த ஆபத்தும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கிய முதல் வாரமான கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதியும் நடான்ஸ் தளம் இலக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய தாக்குதல் ஈரானின் அணுசக்தித் திறனை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
அணு விபத்து ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க இரு தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளில் கட்டுப்பாடு காட்ட வேண்டும் எனச் சர்வதேச அணுசக்தி முகமை வலியுறுத்தியுள்ளது.





