குவைத்தில் அமெரிக்க சினூக் உலங்குவானூர்தி சிதைப்பு! ஈரானின் தற்கொலைப்படை ட்ரோன் நடத்திய அதிரடித் தாக்குதல்
குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் பிரதான இராணுவத் தளமான ‘கேம்ப் புயரிங்’ (Camp Buehring) மீது ஈரான் கடந்த சில தினங்களுக்குள் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், அமெரிக்க இராணுவத்தின் CH-47F “Chinook” ரக உலங்குவானூர்தி ஒன்று மிகக் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
ஈரானின் இந்த ஒருவழித் தாக்குதல் ட்ரோன் (One-way Drone), குறித்த உலங்குவானூர்தியின் விமானி அறை (Cockpit) மற்றும் முன்பக்க விசிறி (Front Rotor) ஆகிய பகுதிகளை நேரடியாகத் தாக்கி அழித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க இராணுவத்தின் போக்குவரத்துத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் இந்த இரட்டை விசிறி கொண்ட ‘சினூக்’ உலங்குவானூர்தி, தாக்குதலின் போது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேளையிலேயே இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானம் மோதி வெடித்ததில் உலங்குவானூர்தியின் முன் பகுதி முற்றாகச் சிதைந்துள்ளதுடன், அதன் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருவது, வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.





