அண்மையில் பல குற்றச்சாட்டுக்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் மீது வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக மேலிடங்களுக்கு நான் தெரியப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நாகரீகமான உலகத்தில் கொடூரமான சித்திரவதைகளை செய்து சித்தங்கேணியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் கொலை செய்துள்ளனர்.
இவர் நகை திருட்டு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகம் நிரூபிக்கப்படவில்லை. திருடன் என்று சொன்னால் கூட இப்படி சித்திரவதை செய்வதற்கு யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் கூட இன்று ஒரு உயிரை கொலை செய்யும் அளவிற்கு சம்பவம் நடந்திருக்கின்றதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் உள்ளவர்களை உடனடியாக வேலையில் இருந்து இடைநிறுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை இடமாற்றம் செய்து யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு யாழ்ப்பாணம் ஒன்றும் சீர்திருத்தப் பள்ளி அல்ல.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையமானது ஆட்கடத்தல், கஞ்சா கடத்தல், போதைவஸ்து கடத்தல், மரம் கடத்தல், மணல் கடத்தல் ஆகியவற்றின் மாஃபியாவாக தான் இருக்கிறது.
இங்கு ஏதாவது முறைப்பாடுகளை செய்வது என்றால் கூட அவர்கள் தான் மக்களுடைய முகவர்களாக வந்து முறைப்பாடுகளை செய்வதும், தங்களுக்கு ஏற்றவாறு சட்டதிட்டங்கள் வாய்ப்புகளை மாற்றிக் கொள்வதுமாக இந்த இடம் இருக்கிறது என்பதும் வேதனையான விடயம். இவை மக்களுடைய அண்மைக்கால முறைப்பாடுகள் மூலம் தெரியவருகிறது என்றார்.