வெடுக்குநாறி மலை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மூதூரில் கவனயீர்ப்பு போராட்டம்!
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற மத அனுஷ்டானங்களின் போதான சம்பவம் கண்டிக்கத்தக்கது, இதற்காக நீதி தேவை எனவும், கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக் கோரி வலியுறுத்தியுமான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று (18) மூதூரில் இடம் பெற்றது.
குறித்த கவனயீர்ப்பை மக்கள் மறுமலர்ச்சி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
திருகோணமலை – மூதூர் பேருந்து நிலைய வீதியில் இருந்து பிரதேச செயலகம் வரை சென்று, பிரதேச செயலாளரிடம் மனு கையளிக்கப்பட்டது.
இதில் ஒன்றிணைந்த சிவில் சமூகம், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இலங்கை அரசே எமது வழிபாட்டு உரிமையை உறுதி செய் போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் இதன் போது கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
அதன் அமைப்பாளர் பாஸ்கரன் பிரபாகரன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துரைத்தார்,
கடந்த எட்டாம் திகதி வெடுக்குநாறியில் நீதிக்கும் சட்டத்துக்கும் புறம்பான கைதை கண்டிக்கிறோம் தொல்பொருள் எனும் போர்வையில் இவ்வாறான தொல்லை கொடுக்கப்படுகிறது. தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்க நினைக்கின்றனர் ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக வாழ வழிவிட வேண்டும் .
தொல்பொருள் என்ற போர்வையில் ஈடுபடாது நீதியான விசாரணை தேவை கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்து தாருங்கள் எனவும் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.