மகா சிவராத்திரியை முன்னிட்டு அருள்மிகு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
இடம்பெறும் இவ் சிறப்பு பூஜை வழிபாட்டில் பக்தர்கள் கலந்துகொள்ள வேண்டாம் எனவும், பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தருவதை தவிர்த்து கொள்ளுமாறும் வீட்டில் இருந்து வழிபாடுகளில் ஈடுபடுமாறும் ஆலய பரிபாலனசபை செயலாளரும் வண்ணக்கருமான இளையதம்பி சாந்தலிங்கம் அவர்கள் பக்த அடியார்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு பாஸர் வீதியிலமைந்துள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்றையதினம் (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க கொக்கட்டிச் சோலை ஆலயத்தில் வருடா வருடம் வெகு விமர்சையாக இடம்பெறும் மகா சிவராத்திரி பூஜை வழிபாட்டிற்கு பிறமாவட்டங்களில் இருந்து இலட்சக் கணக்கான பக்தர்கள் எம்பெருமானை வந்து தரிசித்துச் செல்வது வழமை.
இருந்தபோதிலும் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக மகா சிவராத்திரி பூஜை விழிபாட்டில் பக்தர்கள் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளோம்.
ஆகவே இவ்வாண்டு இடம்பெற விருக்கும் மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகளை ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளோம்.
ஆகவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உட்பட பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்த அடியார்கள் ஆலையத்துக்கு வருவதை தவிர்த்து வீட்டில் இருந்து வழிபாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எம்மையும் பிறரையும் பாதுகாக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆலய பரிபாலனசபை பக்த அடியார்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்வதாக அவ் வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.