எதிர்வரும் ஆறாம் திகதி நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளமை உட்பட விவசாயிகளுக்கு எதிரான அதிகாரிகளின் அத்துமீறல்களை எதிர்த்து இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லியின் எல்லைப் பகுதிகளான காஜிப்பூர், டிக்ரி, சிங்கு ஆகிய இடங்களில் விவசாயிகளின் போராட்டம் தொடந்து வருகின்ற நிலையில், அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நேற்று மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கலின்போது நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. எனினும், விவசாயிகளின் ட்ரக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து இந்தப் பேரணியை விவசாயிகள் சங்கம் ஒத்தி வைத்தது.
ஆனாலும், வரவு செலவுத் திட்டம் தாக்கலின்போது விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் எல்லைப் பகுதிகளில் அதிக பாதுகாப்பு போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.