வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான தமிழர் தாயகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எதிரான பேரணிநான்காம் நாள் தொடர்கின்றது.
மக்கள் பேரெழுச்சியாகிய சாத்வீக பேரணி பல்வேறு தடைகளை உடைத்து சர்வதேசத்தின்பார்வையை பாதிப்புற்ற தாயக மக்களுக்கான நீதி கோரிய போராட்டம் தொடர்கிறது.
இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி இருக்கின்றார்கள்.
இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், பேரெழுச்சிப் பேரணியானது கிளிநொச்சி, வவுனியா சென்று மன்னார் ஊடாக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி வவுனியாவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. வவுனியா நகரத்திற்குள் வலம் வந்த பேரணி தற்போது, மன்னார் வீதியால் முன்னகர்ந்து வருகிறது.
இன்றைய பேரணியில் பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.குறிப்பாக, முஸ்லிம் மக்களும் கணிசமானளவானர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா பள்ளிவாசலின் அருகிலும் பேரணி தரித்து நின்று ஜனசா எரிப்பு உள்ளிட்ட விடயங்களில் கோசமெழுப்பப்பட்டது. அந்த மசூதியின் பிரதான மௌலவியும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.