குன்னூர் அருகே உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ஏனைய வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் குன்னூர் வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர்,
நேற்று மதியம் 12.30 மணியளவில் தனித்தனி வாகனங்கள் மூலம் சுமார் 85 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
அத்துடன் வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சூலூர் விமானப் படைத்தளத்தில் இருந்து விமானம் மூலம் உடல்கள், டில்லி கொண்டு செல்லப்பட்டன.
இரவு 8 மணியளவில் டில்லி பாலம் விமான நிலையத்திற்கு உடல்கள் சென்றடைந்த நிலையில், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு இணையமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மூன்று படைகளின் தளபதிகள் மரியாதை செலுத்தினர்.
உயிரிழந்த பிபின் ராவத் அவரது மனைவி ஆகியோரின் உடல்கள் டெல்லியில் இன்று அவரது இல்லத்தில் 2 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளன.