பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர்களின் உரிமை மறுப்புக்கு எதிரான எழுச்சிப் போராட்டம் மட்டக்களப்பு நகரினை வந்தடைந்தது. இந்தப் போராட்டம், நேற்றுக் காலை பொத்துவில் நகரில் ஆரம்பமான நிலையில், அம்பாறை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் தடைகளைத் தாண்டி வந்து, மட்டக்களப்பு நகரினை இன்று (வியாழக்கிழமை) காலையில் அடைந்தது.
மட்டக்களப்பு நகரில் பெரும் எழுச்சியுடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கல்லடிப் பாலம் ஊடாக பேரணி மட்டக்களப்பைச் சென்றடைந்தபோது பெருமளவான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருப்புக்கொடிகளை ஏந்தியவாறு பேரணியுடன் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின் போது தடையுத்தரவு பெறப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களை அடையாளப்படுத்தி போராட்டத்திற்குச் சென்றவர்களை பல இடங்களில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்றத் தடையுத்தரவினைக் காண்பித்து ஆர்ப்பாட்டப் பேரணியை தடுத்து நிறுத்தி கலைந்துசெல்லுமாறு கூறியபோது, பேரணியில் சென்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலையேற்பட்டது.
இதன்போது, பேரணியில் சென்றவர்களின் பதாகைகளை கிளித்தெறிந்ததுடன் பேரணியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்டபோதிலும் எழுச்சியுடன் பேரணி மட்டக்களப்பு நகரை வந்தடைந்துள்ளது.
தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்களக் குடியேற்றங்கள், முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை எரிப்பது, தமிழ் முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.