யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வடக்கு ஆளுநர் வரவேற்பு
வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார். இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்ட செயகத்தில், யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், மாவட்ட இணைத்தலைவர்களான கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரும் தலைமை தாங்கினர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகள் நீண்டுச்செல்ல இடமளிக்க முடியாது என இன்று நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது அதிமேதகு ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் மீள்குடியேற்ற செயற்பாடுகளும் அடுத்த வருட ஆரம்பத்துக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், எதிர்கால திட்டங்கள் , எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் இரண்டு மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள் தெளிவுப்படுத்தினர். அத்துடன் வடக்கு மாகாணத்தின் நிலைமை குறித்து வட மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன விடயங்களை சமர்பித்தார்.
காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், மீனவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், விவசாயிகளின் பிரச்சினைகள், தீவகங்களுக்கான போக்குவரத்து பிரச்சினை, வீதி சீரின்மை, இளையோருக்கான தொழில் பயிற்சியின்மை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இன்றைய விசேட கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டது.