165 பிஞ்சுயிர்களைப் பலிவாங்கிய அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்! குற்றவாளிகளைப் புகைப்படங்களுடன் அம்பலப்படுத்திய ஈரான்
ஈரானின் மினாப் நகரில் உள்ள ‘ஷஜரே தையேபா’ (Shajareh Tayyeba) சிறுமிகள் ஆரம்பப் பள்ளி மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 165 சிறுமிகள் மற்றும் ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரானின் உச்சத்தலைவர் கமெனி கொல்லப்பட்ட அதே நாளில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆரம்பத்தில் இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று மறுத்த அமெரிக்கா, பின்னர் தவறான வரைபடத் தரவுகள் காரணமாக ராணுவத் தளத்திற்குப் பதிலாகத் தவறுதலாகப் பள்ளி தாக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில், இந்தப் படுகொலைக்கு நேரடியாகக் காரணமானவர்கள் என அமெரிக்கக் கடற்படையின் இரண்டு உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை ஈரான் தற்போது வெளியிட்டுள்ளது.
லெய் ஆர். டேட் (Leigh R Tate) மற்றும் ஜெப்ரி இ. யார்க் (Jeffrey E York) ஆகியோரே அந்த அதிகாரிகள் என ஈரான் தூதரகங்கள் அறிவித்துள்ளன. இவர்கள் இருவரும் USS ஸ்ப்ருவான்ஸ் (USS Spruance) என்ற போர்க்கப்பலில் இருந்து ‘டோமாஹாக்’ ஏவுகணைகளை ஏவுவதற்கு மூன்று முறை உத்தரவிட்டதாக ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவில் உள்ள ஈரானியத் தூதரகங்கள் இந்த அதிகாரிகளின் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, “இந்த இரண்டு குற்றவாளிகளையும் நினைவில் கொள்ளுங்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்தப் படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள நிலையில், ஈரானின் இந்த அதிரடி நகர்வு அமெரிக்காவிற்குப் பெரும் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.





