வெனிசுவெலாவின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்!
வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை (ஜனவரி 3, 2026) அதிகாலை வெனிசுவெலா மீது அமெரிக்கா நடத்திய ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசோல்வ்’ (Operation Absolute Resolve) என்ற மின்னல் வேகத் தாக்குதலில் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
ஜனாதிபதி மதுரோ இல்லாத நிலையில், நாட்டின் பாதுகாப்பையும் நிர்வாகத் தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்காக, தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்காலப் பொறுப்பை ஏற்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“வெனிசுவெலாவை அமெரிக்காவே தற்காலிகமாக நிர்வகிக்கும்” என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், வெனிசுவெலா உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதவியேற்ற பின்னர் உரையாற்றிய டெல்சி ரோட்ரிக்ஸ், “நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்போம்” என்று உறுதியளித்ததோடு, மதுரோவே வெனிசுவெலாவின் ஒரே ஜனாதிபதி என்றும், அவரது கைது ஒரு “கடத்தல்” நடவடிக்கை என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.





