வெனிசுவேலா ஜனாதிபதி கைது ஜனநாயக விரோதச் செயல்! – அமெரிக்காவிற்கு எதிராக பிமல் கடும் கண்டனம்
ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்து நாடு கடத்தியுள்ளமையானது, சர்வதேசச் சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைகளையும் அப்பட்டமாக மீறும் செயல் எனச் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இறையாண்மைக்கு எதிராக வெனிசுவேலா ஒருபோதும் செயற்பட்டதில்லை. அவ்வாறிருக்கையில், ஒரு நாட்டின் தலைவரைப் பிறிதொரு நாடு கைது செய்வது சர்வதேச ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகும்” என அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் தலைவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த நாட்டு மக்களுக்கே உள்ளது. இதில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில் வெனிசுவேலாவில் கல்வி மற்றும் சுகாதாரம் இலவசமாக்கப்பட்டதையும், தடைகளுக்கு மத்தியிலும் நாடு முன்னேற்றமடைந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘கொழும்புத் திட்டம்’ (Colombo Plan) உள்ளிட்ட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளமை கவலைக்குரியது. இது குறித்து இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.





