எரிபொருள் விநியோக நிலை குறித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலிலும், இலங்கையில் தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். தற்போது அடுத்த 33 நாட்களுக்குத் தேவையான டீசல் மற்றும் 27 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுக்கச் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மார்ச் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் 35,000 தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையும் எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மார்ச் 14 இல் RM Parks மற்றும் SINOPEC நிறுவனங்களின் கப்பல்களும், மார்ச் 21 இல் IOC மற்றும் மார்ச் 28 இல் லங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கப்பல்களும் வரவுள்ளதாக அவர் பட்டியலிட்டார்.
மத்திய கிழக்கு போர் தீவிரமடைந்தால் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தைப் பாதிப்பதாகக் கவலை வெளியிட்டார். மேலும், மத்திய கிழக்கு நெருக்கடியினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு இணைந்து அறிக்கைகளைத் தயாரித்து வருவதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.





