வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு, எதிர்கால வாழ்வாதாரத்தையும் முதலீட்டு வாய்ப்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்படாமல் உள்ள அரச காணிகளை வழங்கும் புதிய வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டு திட்டங்களின் முன்னேற்ற ஆய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆலோசனைக் கூட்டத்தின் போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அதேநேரம், மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 10,000 வீடுகள் திட்டத்தை திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கூட்டத்தில் பெருந்தோட்டக் காணிகளை அளவீடு செய்யும் திட்டம், தென்னை நோய் கட்டுப்பாடு, ‘கப்ருக’ நிதியம், வடக்கு தென்னை முக்கோணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன் திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதி, செயற்பாட்டு குறைபாடுகள் காரணமாக முழுமையாக பயன்படுத்தப்படாமல் திரும்பிச் செல்லும் நிலை இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டி, அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும் தேயிலை, தென்னை, இறப்பர், முந்திரி, பனை உள்ளிட்ட பெருந்தோட்டப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள், ஆராய்ச்சி நடவடிக்கைகள், மீள் பயிரிடும் வேலைத்திட்டங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அரசுக்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களின் இலாபம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததுடன், பெருந்தோட்டத் துறையை மேலும் வலுப்படுத்த நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் மற்றும் காணி ஒப்பந்தங்களை வலுப்படுத்தும் திட்டங்களும் கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்பட்டன.





