சிதைந்த நகரத்தில் நின்றபடி ஈரானுக்கு நெதன்யாகு எச்சரிக்கை!
ஈரானால் கடுமையாகத் தாக்கப்பட்ட தெற்கு இஸ்ரேலிய நகரமான அராத்தை (Arad) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்த உக்கிரமான ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 84 பேர் காயமடைந்ததுடன், அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதியை இலக்கு வைத்து ஈரான் நடத்தியுள்ள இந்தத் தாக்குதலை நெதன்யாகு வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அராத் மற்றும் டிமோனா நகரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நெதன்யாகு, “ஈரான் பொதுமக்களைக் கொல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு பெரும் படுகொலை ஆயுதத்தைப் போன்றது.
அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலிகள் ஏற்படவில்லை, ஆனால் ஈரானின் நோக்கம் அழிவே” எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், ஈரானின் ஏவுகணைகள் தற்போது ஐரோப்பாவின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவக்கூடியவை என அவர் எச்சரித்தார்.
சைப்ரஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளையும் ஈரான் இலக்கு வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சர்வதேச எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைத் தடுத்து ஈரான் உலகையே மிரட்டி வருவதாகச் சாடினார்.
உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஆட்சியை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் சர்வதேச சமூகத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார்.




