எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான லிட்ரோ நிறுவனத்தின் தகவல்
சர்வதேச சந்தையில் நிலவும் வர்த்தகப் பதற்றங்கள் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைத்திருத்தம் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் எரிசக்தி தேவையின் அதிகரிப்பு ஆகியவையே இந்த விலை உயர்வுக்குப் பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
விலையேற்றம் குறித்த அச்சம் நிலவிய போதிலும், எதிர்வரும் மே மாதம் வரை நாட்டுக்குத் தேவையான போதுமான எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் விரைவில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், இதனால் தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் சன்ன குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.




